Sunday, August 22, 2010

தெய்வம் தெளிமின்

தெய்வம் தெளிமின்

தமிழின் ஆதிகாவியம் என்று போற்றப்படுவது சிலப்பதிகாரம். இதன் சிறப்பை அறிந்து, பாரதியார் “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்றார். காவியங்கள் பொதுவாக அரசனைப் பற்றியோ அல்லது தெய்வத்தைப் பற்றியோ அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சிலப்பதிகாரம் தமிழின் முதல் காவியமாக மட்டும் திகழாமல், சாதரண நிலை மாந்தர்களை வைத்து எழுந்த முதல் காவியமும் கூட. அதுவும், பெண் மகளை வைத்துப் பாடபட்ட முதல் காவியமுமாகும். ஐம்பெரும் காப்பியங்கள் வரிசையில் இதுவும் ஒன்று. இப்பேற்பட்ட காவியத்தை யாத்தவர் இளங்கோவடிகளாவார்.

சிலப்பதிகாரக் காலம்

இதன் காலம் ஸ்திரமாக சொல்ல முடியாவிட்டாலும் பெரும்பாலான அறிஞர்கள் 2ஆம் நூற்றாண்டு என்று கொள்கின்றனர். “தமிழ்க் காவலர்கள்”  இன்னும் முன்னம் என்று கொள்வர். இக்கால நிர்ணயம் இங்கு தேவையில்லை யாதலால், கட்டுரையின் தலைப்பை நோக்கிச் செல்வோம். ;-)

இளங்கோவடிகளின் அறிவுரை

சிலப்பதிகாரத்தை முடிக்கும் முன்னர், இக்கதையைப் படித்தவர்களுக்கு சில அறிவுரைகள் சொல்லி அவைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்துகிறார். அப்பாட்டு,

”………………………..
என்திறம் உரைத்த இமையோர் இளங்கொடி
தன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி
தெரிவுறத் கேட்ட திருத்தகு நல்வீர்” - வரந்தரு காதை (185)
“பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்
ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்
தானம் செய்ம்மின் தவம்பல தாங்குமின்” - வரந்தரு காதை (190)
“செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்” - வரந்தரு காதை (195)
“அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது” - வரந்தரு காதை (200)
“செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென்”

என் உரை:

இளங்கொடியாளான கண்ணகியின் கதைக் கேட்ட நல்லவர்களே! கேளுங்கள்!!

1. கவலையும், துன்பமும் விட்டு ஒழியுங்கள்,
2. தெய்வம் எது என்று தெளியுங்கள்,
3. அப்படி தெளிந்து ஏற்றுக்கொண்டவர்களை பின்பற்றுங்கள்,
4. பொய் சொல்லாதீர்கள், புறங்கூறுதலை அகற்றுங்கள்,
5. புலால் உணவை விலக்குங்கள்,
6. பிற உயிர்களைக் கொல்லாதீர்கள், (கொல்லாமை கடைப்பிடியுங்கள்),
7. தானம் செய்யுங்கள்,
8. நோன்புகள் பல ஏற்றுக் கொள்ளுங்கள்,
9. பிறர்ச் செய்த உதவிகளை மறக்காதீர்கள்,
10. தீய நட்பை விலக்குங்கள்,
11. பொய்ச் சாட்சி சொல்லாதீர்கள்,
12. உண்மை மொழியினை விட்டு அகலாதீர்கள்,
13. அறவோர்களை நாடி செல்லுங்கள்,
14. அறவோர் அல்லாதவர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள்,
15. பிறர் மனைவியை தாயாக நினையுங்கள்,
16. நிர்கதியாக இருக்கும் உயிர்களைக் காப்பாற்றுங்கள்,
17. இல்லறத்தைப் போற்றுங்கள்,
18. தீயவைகளைச் செய்யாதீர்கள்,
19. குடியை விட்டுவிடுங்கள்,
20. திருடாதீர்கள்,
21. விலைமாதர்களிடம் செல்லாதீர்கள்,
22. பொய் பேசாதீர்கள்,
23. பயனற்ற பேச்சுகளை பேசாதீர்கள்,
24. இளமை நிலைக்காது,
25. செல்வம் நிலைக்காது,
26. உடம்பும் நிலைக்காது

ஆயுட் காலம் எப்போது முடியும் என்று தெரியாது, மரணமும் தவிர்க்க முடியாதது, அறம் ஒன்றே உய்விக்கும்! அறமே மறுமைக்கும் துணையாக பின் வரும். ஆதலின் அறம் செய்து வாழ்வாங்கு வாழுங்கள்!!

என்று தன் காவியத்தை முடிக்கிறார். மேற்சொன்ன அனைத்து அறிவுரையும் அப்படியே திருக்குறளில் எதிர் ஒலிப்பதையும் ஈண்டு நோக்குக!

தெளிமின்! தெளிந்தோர்ப் பேணுமின்!!

..” தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்”

இந்த வரியில் இளங்கோவடிகளின் உள்ளக் கிடக்கை தெற்றென விளங்குகிறது. என் காவியத்தில், பல கடவுள்களை கூறியிருக்கிறேன், அவர்களில் உண்மையான தெய்வம் யார் என்று தெளியுங்கள். அப்படி உங்களுக்கு தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களை (தெளிந்தவர்களை) கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
அப்படி இளங்கோவடிகளில் நிறைந்த அந்த தெய்வம் யார்? இளங்கோ தன் காவியத்தில் ஒரு யுக்தியை கையாள்கிறார். கதையில் நிறைய மாந்தர்களை உலவ விட்டிருந்தாலும், தன் மனதில் பிரதிப்பளிப்பாக, கவுந்தியடிகளின் பத்திரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். கவுந்தியடிகள் கதாப்பாத்திரத்தை எடுத்துவிட்டுப் பார்த்தாலும், கதைக்கு எந்த பங்கமும் வராது. பின் ஏன் அந்தக் கதாப்பாத்திரம்? தன் சமயக் கொள்கையை கதையில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் கவுந்தி என்றப் பாத்திரத்தைப் படைத்துக் கதையை நகர்த்திச் செல்கிறார் இளங்கோவடிகள்.
இறைவாழ்த்தில் இயற்கையைப் பாடியவர், தன் உள்ளக்கிடக்கை சரியான நேரத்தில் கவுந்தியின் மூலமாக உள் நுழைக்கிறார்.

மதுரைக் காண்டம், காடுகாண் காதையில்,

“திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்” – (5)

என்று அருகப் பெருமானை வணங்கி, பின் கவுந்தியின் மூலமாக சமணக் கருத்துகளை ஆங்காங்கே தூவிச் செல்கிறார் இளங்கோவடிகள். அத்தொடு அல்லாமல் அப்பிராட்டியின் வாயிலாக,

“..ஒரு மூன் றவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதென் செவியகம் திறவா”

என்றும்,

“காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு
நாமம் அல்லது நவிலா தென்னா
ஐவரை வென்றோன் அடிஇணை அல்லது
கைவரக் காணினும் காணா என்கண்
அருளறம் பூண்டோன் திருமெய்க்கு அல்லதென்”


என்றும்,

“பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது
அருகர் அறவம் அறிவோற் கல்லதென்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா
மலர்மிசை நடந்தோன் மலர்அடி அல்லதென்
தலைமிசை உச்சி தானணிப் பொறா அது”

என்றும்,

“இறுதியில் இன்பத் திறைமொழிக் கல்லது
மறுதர ஓதியென் மனம்புடை பெயராது”


என்று கூறுவதையும் ஈண்டு நோக்குக.

இதனால் சிலப்பதிகார ஆசிரியர் உள்ளம் யாது என்றும் அவர் எந்த தெய்வத்தை தெளிந்திருக்கிறார் என்றும் நாம் உணரலாம். அவரின் வாக்கை நாமும் பின்பற்றி,

”ஆதியில் தோற்றத்து பகவனை, மலர்மிசை நடந்த மன்னவனை, அறவாழி ஏந்திய அந்தணனை, எண்குணத்தானை, வாலறிவனை” வணங்கி ஏத்துவோமாக!

தெய்வம் தெளிமின்!!

அறம் மறவற்க! அறமல்லது துணையில்லை!!
வாழ்க திருவறம்! வளர்க நல்லறம்!!

இரா.பா
சென்னை

Sunday, August 08, 2010

ஆதிபகவன்

ஆதிபகவன்

மலர்மிசை ஏகினான், அறவாழி அந்தணன் ஆகிய கட்டுரைகள் எழுதும் போதே சில நண்பர்கள் முதல் குறளைப் பற்றியும் எழுதச் சொன்னார்கள். திரு.மஞ்சை வசந்தன் என்பார் முதல் குறளுக்கு எழுதியக் கட்டுரையை இங்கிட்டு என் கருத்தைப் பின்னர் எழுதுகிறேன் என்று சொன்னதோடு சரி. எழுதச் சந்தர்ப்பம் அமையவில்லை.

ஆனால், சமீபத்தில் மின்தமிழ்க் குழுமத்தில் ஆதிபகவன் பற்றிய இழையொன்றில் இரண்டு அறிஞர்களின் 1930ல் எழுதியக் கட்டுரையைக் கொடுத்திருந்தேன். எல்லா குழுமங்களில் நடப்பது போலதான் இங்கும் நடந்தது. இரசத்தை (சாரத்தை) விட்டு சக்கையைப் பிடித்தார் போல் “நடந்தவன்”, ”சென்றவன்” என்பதற்கு மேலே ஏதும் விளங்கிக்க முடியவில்லை. பொதுவாக, குழுமங்களில், அறிவுக்கு (மூளை) பதில் உணர்ச்சிக்கு (இதயம்) இடம் கொடுக்கப்படுகின்றபடியால் அங்கு மேலும் எழுதுவதில் பயனில்லை என்பதால் இங்கு எழுதும் படியாயிற்று! :-)



இங்கு எழுதுவதால், ஒரு செளகரியம்! சிலர் நேரடையாக பின்னூட்டுக் கொடுத்து மனதில் பட்டதை எழுதுவார்கள். இன்னும் சிலர், கட்டுரைப் படித்தக் கையோடு தனி மடலில் தங்கள் சந்தேகங்களை விளக்கச் சொல்வார்கள். இதனால் புரிதல் விரிவடையும். எனக்கும்தான்!! ;-)



அறிஞர்கள் பட்டியல்!

எனக்கு தெரிந்து தமிழ் இலக்கிய உலகில் சில நூற்றாண்டுகளாக ஆராயப்பட்டு வரும் கேள்வி இதுவாகத் தான் இருக்கும். குறளாசிரியர் யாரை தன் இறைவனாக ஏற்கிறார் அல்லது அவர் குறிப்பிடும் அந்த இறைவன் யார் என்ற கேள்வி பல காலமாக நிறைய அறிஞர்களில் மனதில் அரித்துக் கொண்டு வந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது!

பல அறிஞர்கள் அவற்றிற்கு விடைத்தேடி, நடு நோக்கோடு, திருக்குறள் சமணம் சார்ந்தது என்று ஆய்ந்து ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனினும்  சில அறிஞர்கள் சமண கருத்துக்கள் (அறன் வலியுறுத்தல், கொல்லாமை, புலால் மறுத்தல்) திருக்குறளில் காணப்பட்டாலும், குறளாசிரியர் சமணர் அல்லர் என்று எழுதியிருக்கிறார்கள். குறளாசிரியர் சமணர் என்று கூறும் அறிஞர்கள் பட்டியலை கீழேக் கொடுத்துள்ளேன். இவர்கள் யாரும் சமணரல்லர் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.

1. தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரனார்
2. மயிலை.சீனி.வேங்கடசாமி
3. வித்துவான். மே.வீ.வேணுகோபால பிள்ளை
4. திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை
5. பதிப்புசெம்மல். திரு.சண்முகம்பிள்ளை
6. திரு.அ.கி.பரந்தாமனார்
7. பன்மொழிப் புலவர். தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
8. பன்மொழிப் புலவர். வெங்கடராஜுலு ரெட்டியார்
9. சர். ஆர்.கே.சண்முகம் செட்டியார்
10. பன்மொழிப் புலவர். மு.கு.ஜகந்நாத ராஜா
11. தில்லையம்பூதூர் திரு.வெங்கட்ராம ஐய்யங்கார்
12. கவிராஜபண்டிதர் ஜெகவீரபாண்டியனார்
13. பிஷப் கால்டுவெல் துரை மகனார்
14. பிரான்சிஸ் வைட் எல்லீஸ் துரை மகனார்
15. காஞ்சி. திரு.டி.ஆர்.சீனிவாச்சாரியார்
16. மழபாடி. மகாலிங்க ஐயர்
17. திரு. ஐராவதம்.மகாதேவன்
18. திரு. க.ந.சுப்ரமணியம்
19. கல்வெட்டறிஞர். திரு.செ.இராசு
20. பேரா. க.நாச்சிமுத்து
21. திரு. சிவ.விவேகானந்தன்
22. முனைவர். துளசி.இராமசாமி
23. திரு. மறைந்த எழுத்தாளர் சுஜாதா
24. புலவர். கவிகோ.அப்துல் ரஹ்மான்
25. பேரா. ஏகாம்பர நாதன்
26. நாசா. விஞ்ஞானி. நா. கணேசன்
27. பேரா. சந்தரசேகர்
28. திரு. ஜெயமோகன்
29. திரு. மஞ்சை வசந்தன்
30. திரு. அருணன்
31. திரு. பேரறிஞர். அண்ணாதுரை
32. திரு. கே.என். நீலகண்ட சாஸ்திரி
33. பேராசிரியர். க. பூர்ணச்சந்திரன்
34. பேரா.கார்த்திகேசு சிவதம்பி
35. பேரா.தொ.பரமசிவன்
36. பேரா.கைலாசபதி
37. கல்வெட்டறிஞர் திரு.எஸ்.இராமச்சந்திரன்
38. பேரா.கமில் சுவலபில் (Kamil Vaclav Zvelebil)
39.

பட்டியல் வளரும் …………………………..

இனி, கட்டுரைக்குள் செல்வோம்?


அகர முதல எழுத்தேல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு – திருக்குறள்
(1)

விளக்கம்:
உலகம், அகரம் முதலான எழுத்துக்களை எல்லாம் ஆதிபகவனை முதலாகக் கொண்டுள்ளது.

விரிவுரை:

அகர முதல - அகரத்தை முதலாகத் தொடங்கி வரும், எழுத்துக்கள் என்று பொதுப்பட சொல்லினும், எண்களையும் அவை குறிக்குமாதலின் எழுத்தேல்லாம் என்றார், ஆதிபகவன்  - ஆதியங் கடவுள், முதல் கடவுள் , முதற்றே உலகு - உலகின் கண் ஆதி பகவனிடம் இருந்து தோன்றிற்று.
அஃதாவது, ஆதிபகவனாலேயே எண்ணும், எழுத்தும் இவ்வுலகின் கண் தோன்றியது எனபது கருத்து.

ஆதிபகவன் யார்?

ஆதி என்பதற்கு முதல் என்றும் தொன்மை என்றும் பொருள் படும். முதல் பகவன் என்றும் ஆதியில் தோன்றிய பகவன் என்று பொருள் கொள்ளலாம். ஆயினும், இங்கு ஆதி என்பது முதல் என்றே பொருள் கொள்ள வேண்டும். அ (ரகம்) எழுத்து மற்ற எழுத்துகளுக்கு எல்லாம் முதலாக வரும். ஆதிபகவன் மற்ற பகவர்களுக்கெல்லாம் முதலாக இருக்கிறார். மற்ற பகவர்கள் யாவர்? எனின், சமண சமயத்தில் காலந்தோறும் (இறந்த, நிகழ், வருங்காலம்) இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றுவார்கள் என்றும், அவர்கள் மக்களை நல்வழிப் படுத்தி அறம் புகட்டுவார்கள் என்பதும் சமணர்கள் நம்பிக்கை. அவ்வாறே நிகழ்க் காலத் தீர்த்தங்கரர்கள் இருபத்துநால்வர். அவர்களில் முதலாமவர் இரிஷபதேவர் என்று போற்றப்படும் ஆதி தீர்த்தங்கரர் ஆவார். சமண இலக்கியங்கள் (வடமொழி, தென்மொழி) இவர் திருநாமங்களை இவ்வாறுப் போற்றும்,

ஆதி, ஆதிபகவன், ஆதிநாதர், ஆதிதேவன், ஆதிமுதல்வன், ஆதிமூர்த்தி, ஆதிமூலர், ஆதிபிரம்மா, ஆதிமுதற் கடவுள், ஆதிநாள் அரசர், ஆதீஸ்வரன், ஆதிசக்கரவர்த்தி, ஆதிபட்டாரகர், ஆதிநாயகன், ஆதிஜினன், ஆதிராஜா, ஆதிபரமேஸ்வரன், ஆதித்தீர்த்தன், ஆதியங் கடவுள்


ஆதிபகவன் என்றுப் போற்றப்படும் ரிஷபநாதர், எண்ணையும், எழுத்தையும் முதன்முதல் உலகின் கண் உருவாக்கினார். அவரே கல்விக்கு மூல ஆதாரம். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதற்கிணங்க ஆதிநாதர் தன் பெண் பிள்ளைகளுக்கு எண்ணையும், எழுத்தையும் முதல் முதலில் கற்பித்தார். நிகண்டு நூல்களில் தலைச் சிறந்ததாகக் கருதப்படும் சூடாமணி நிகண்டு,

விருப்புறு பொன்னே யிற்குள் விளங்கவெண் ணெழுத்திரண்டும்
பரப்பிய வாதிமூர்த்தி பங்கயப்பாதம் போற்றி
! – (நாலாவது தொகுதி – கடவுள் வணக்கம்)

என்றும்,

ஆதிநாதர் பிள்ளைத் தமிழ் என்னும் நூலில்,

“சசிகளாதித்த ரொருகோடி வந்தோருருக்
கொண்டாடி கண்ட பரமனே
சமவசர ணேசனே இமையவர்களீசனே
சார்ந்தவர்க் கைந்தாருவே
இசையினா லெண்ணெழுந் தியம்புவித்தாயுநீ” 



என்றும் போற்றப்படுவதை நோக்குக. இதனால் அகரம் முதலிய எண்ணும், எழுத்தும் ஆதிபகவனிடம் இருந்துத் தோன்றியது என்பதைக் காணலாம்.

ஆதிபகவன் என்னும் சொற்றொடர்

ஆதி என்பதற்கு இங்கு முதல் என்பதுதான் பொருந்தும் என்று முன்னமே பார்த்தோம். ஆதிபகவன் என்பது முதல் பகவன் என்று ஆகும். இதனை தமிழ்ச் சமண இலக்கியத்தில் இருந்து சான்றுக் காட்டுவோம்.

“மன்னியபே ருலகனைத்தும்
நின்னுள்ளேநீ யொடுக்கினை
ந்ன்னின்று நீவிரித்தனை
நின்னருளின் நீகாத்தனை-எனவாங்கு
ஆதிபகவனை அருகனை
மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே”
– திருக்கலம்பகம்

ஆதிபகவன் அசோக வசலன்
சேதிபமுதல்வன் சினவரந்தியம் பகன்”
– திருப்பாமாலை

“அத்தனே என்னை ஆளீர் சரணம்
ஆதிபகவன் அருளே சரணம்”
– தோத்திரத் திரட்டு

பகவன்” என்பதற்கு அடியாருக்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் கேவல ஞானி என்றே பொருள் உரைத்திருக்கிறார். ”பகவன்” என்ற சொல் பல தமிழ்ச் சமண இலக்கியத்தில் காணலாம். அம்மேற்கோள்களைச் சுட்டினால் விரிவடையும் என்று இங்குக் கொடுக்கப்படவில்லை.

இன்னுமொரு காட்டு. தமிழின் முதல் உரைநடை நூலான சிறீபுராணம் (ஸ்ரீபுராணம்) என்ற நூலில் இருந்துத் தரப்படுகிறது.

ஸ்ரீபுராணம் - ஆதிபர்வம்
“அன்னைமீர்! நீங்கள் பாலைகளாகவிருக்கின்றீர்களெனினும். சீலவிநயங்களால் பரிணதைகளாக விருக்கின்றீர்கள்; ஈத்ரஸமாகிய ரூபயெளவனாவஸ்தா சீலாசாரங்கள் வித்தையால் அலங்கிருதமாகில் அன்றோ ஸ்ரேஷ்டமாகும்; ஜன்மபலமாவது வித்தையே; எஸஸ்ஸினையும், ஸ்ரேயஸ்ஸினையும் தருவது வித்தையே; கருதியவற்றைத்தரும் சிந்தாமணியாவதும் வித்தையே; தர்மார்த்தகாமங்களுள் சம்பத்பரம்பரையைத் தருவதும் வித்தையே; பந்துவாவதும். மித்திரராவதும், சர்வார்த்தங்களையும் சாதிக்கும் தேவதையாவதும் வித்தையே; ஆகையால், நீங்கள் வித்தையினைக் கைக் கொள்வீர்களாக” என்பனவே.

பகவான் இவ்வாறு சொல்லி அவர்களை ஆசிர்வாதவசனங்களால் வாழ்த்தித் தமது ஹிருதயகமலத்தெழுந்தருளியிருந்த ஸ்ருததேவியினை ஸ்வர்ணபட்டகத்தின் மிசை பூஜாபுரஸ்ஸரம் அதிவசிப்பித்து, ஸ்ரீஅஸ்தமிரண்டுனுலும் ஒரு முறையிலேயே எழுத்தினையும் எண்ணையும் அவர்கட்குக் காட்டியருளினர்.

அங்ஙனம் காட்டி அவருள் பிராம்மியென்னும் பெண்ணிற்கு தக்ஷிண அஸ்தத்தால், ‘சித்தந்நம:’ என்றெடுத்துக் கொள்ளப்பட்ட மங்களத்தையும், அகராதி ஹகாராந்தமாகிய ஸ்வரம் வியஞ்சனமென்னும் இரண்டு பேதத்தினை உடைத்தாகியதும், அயோகவாகங்கள் இரண்டாகவுடையதுமாகிய அக்ஷரமாலையினையும், சம்யோகாக்ஷரங்களது பிறப்பினையும் உபதேசித்தனர்.
சுந்தரியென்னும் பெண்ணிற்கு வாம அஸ்தத்தினால் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமுதலாக ஒன்றிற்கொன்று பதின்மடங்காகிய கணிதஸ்தானங்களையும். பெருக்குதல், ஈதல் முதலாகிய ஷோடசபரிகர்மங்களையு முபதேசித்தருளினார். இங்ஙன ஸ்வாமி தமது தக்ஷிண அஸ்தத்தினால் எழுத்துக்களை உபதேசித்ததால் எழுத்துக்கள் வலமாக வளர்ந்தன; வாமஹஸ்தத்தினால் எண்களை உபதேசித்தருளியதால் எண்களது ஸ்தானம் இடமாக வளர்ந்தது. சகலசாஸ்திரங்களும் அக்ஷரங்களின்றி நிகழாவாதலின் பிரஜாபதி முந்துற அக்ஷரங்களை, உபதேசித்தருளிப் பின்னும் இருவருக்கும் வியாகரணமும், சந்தோவிஸ்சித்தியும், அலங்காரமுமாகிய ஸ்பத சாஸ்திரங்களையும் உபதேசித்தருளினர். அவ்விருவரும் பிரக்ஞாபலத்தால் (புத்திவிசேஷத்தால்) பகவானால் உபதேசிக்கப்பட்ட சகலவித்தைகளையும் உணர்ந்தனர்.”



முடிபு:

தேவர் பெருமான் (குறளாசிரியர்)  “ஆதிபகவன் முதற்றே உலகு” என்றது முதல் சமணத் தீர்த்தங்கரரான “ஆதிநாதரை” என்பது தெள்ளிதில் விளங்கும். அடுத்த குறளான “கற்றதனால் ஆயப் பயன்னென் கொல்” என்ற குறளும் இந்தக் கருத்துக்கு அரண் செய்யும்.

இன்னும்மோற் எடுத்துக்காட்டு கொடுத்து இக்கட்டுரையை முடிக்கிறேன்.

சமண முனிவரான “அகளங்க தேவர்” என்னும் பன்மொழிப் புலவர் “தத்வார்த்த சூத்திரம்” என்னும் நூலில் 11ஆம் சூத்திரத்துக்கு உரை எழுதுகையில் ஆதி என்னும் சப்தம் அநேகப் பொருள்களையுடைய தெனவும், சில இடங்களில் முதல் என்னும் பொருள் பெற்று வருமென்றும் உரை வரைந்துள்ளார். அதற்கு மேற்கோளாக,

“அகாரா தயோ வர்ணா
ரிஷபா தய்ஸ் தீர்த்தகரா இதி” 



என்னும் சுலோகத்தைக் காட்டிப் பின்வருமாறு விரிவுரை எழுதுகிறார்.

“எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன, தீர்த்தங்கரர்கள் ரிஷப தேவரை முதலாக உடையர்” என்பதாகும்.

அவ்வாறே நம் குறளாசிரியரும் அகர வரிசையில் அ முதல் எழுத்தாக வருவதுபோல, பின்வரும் பகவர்களுக்கு (தீர்த்தங்கரர்களுக்கு) ஆதிபகவன் முதலாக உள்ளார் என்று கூறுவதை மேற்சொன்ன எடுத்துக்காட்டுடன் ஒப்புமை நோக்க குறளாசிரியன் உள்ளம் எளிதில் புரியும்.

இரா.பானுகுமார், (இரா.பா)
சென்னை

08.08.2010

Tuesday, July 06, 2010

Scientific Evidences in Neelakeci 1

Scientific evidence in Neelakeci

R.Banukumar

Preface

Neelakeci, one among the five minor kavyas in Tamil literature, the others being Sulamani, Nagakumara Kavya, Uthayanakumara Kavya and Yasothara Kavya. Neelakeci, a work based on logical (தர்க்கம்) analysis of the Indian philosophical systems such as the Buddhist school of philosophy, the Ajiika school of philosophy , the Sankaya school of Philosophy, the Veda school of Philosophy, the Vaishadika school of Philosophy and the Buthavada school of Philosophy that were prevalent in ancient India . The author’s name remains unknown. It was assumed by scholars that it was written between the 4th to 5th century CE based on the internal evidences available in the book. The book appears to be a refutation of the Buddhist work called Kundalakeci which is unfortunately lost now. Kundalakeci was included as one among the major kavyas of Tamil literature, the others being Cilapathikaram, Ceevagachintamani, Valaiyapathi &  Manimekalai.

The book is named after a shudra woman called Neelakeci who learnt Jain school of Philosophy (Doctrine of Ahimsa – Non-Violence to all living beings) from a Jaina monk Munichandra and took oath to preach the doctrine of Ahimsa throughout the country. Hence she visits various places & refutes the other school of philosophies in order to highlight the supremacy of Ahimsa dharma (Jaina school of doctrine).

However, our focus here is to bring out the scientific knowledge among Tamils in those early times. Neelakeci clearly brings out, talks about few of the scientific know how, “How Rainbow forms”; the difference between velocity of Light and sound; plants do experience sensation and have life; Infinite numbers etc.,


Scientific evidence in Neelakeci

To quote an instance from Neelakeci which clearly illustrates the formation of Rainbow in compliance with the modern science!

Rainbow:

In the sixth chapter “Ajivakavada sarkam”, Neelakeci refutes the Ajikava School of philosophy. During the debate the “Puranan”, a leader of this school, argues that his God’s appearance is unintelligible and inexplicable - when the rainbow appears in the sky. For this Neelakeci replied like this:


வானிடு வில்லின் வரவறி யாத வகையனென்பாய்
தானுடம் போடு பொறியின னாதலிற் சாதகனா
மீனடைந் தோடும் விடுசுட ரான்கதிர் வீழ்புயன்மேற்
றானடைந் தாற்றனு வாமிது வாமதன் றத்துவமே - 684 (நீலகேசி)

In this stanza which is important is the line ’மீனடைந் தோடும் விடுசுட ரான்கதிர் வீழ்புயன்மேற்’.

Let us see the meaning of this line.

வானிடு வில் = வானவில் = Rainbow
சுடரான் = சுடரோன் = Sun.
கதிர் = Rays of Sun
வீழ்புயன்மேற் = நீர் மேகத்திற் மேல் = over the clouds containing water particles.

A rough translation of the above: Rainbow is formed when the rays of the sunlight shines over the clouds (நீர்மேகம்) which contain water particles. This is an accepted theory of modern physics.

(Refer: Wikipedia - A rainbow is an optical and meteorological phenomenon that causes a spectrum of light to appear in the sky when the Sun shines onto droplets of moisture in the Earth's atmosphere. They take the form of a multicolored arc, with red on the outer part of the arch and violet on the inner section of the arch. http://en.wikipedia.org/wiki/Rainbow )

Conclusion:

From the above it is clearly evident, that, at least during the 4th CE, Tamils were aware of the scientific reasons for the formation of a rainbow. This might be the first written evidence available to us since the modern age.

Monday, February 15, 2010

இந்திரனும் சிறுகுரங்கும்

இந்திரனும் சிறுகுரங்கும்!

நாம் வாழ்க்கையில் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கிறோம். சிலர்
செல்வந்தர்களாகவும், பலர் ஏழ்மையில் உழல்பவராகவும் இருக்க
காணுகிறோம். இந்நிலைமை ஏன்?

சிலர் பரம்பரைப் பணக்காரர்களாகவும், சிலர் தன் உழைப்பால் பெரிய நிலைக்கு
உயர்ந்தவர்களாகவும், சிலர் பரம்பரைப் பணக்காரர்களாகயிருந்து பின் தாழ்வுற்று
வறியவர்களாகவும், சிலர் ஏழ்மையில் பிறந்தாலும், தன் சுயமுயற்சியால் பெரும் பணக்காரர்களாக ஆகுவதையும் நாம் பார்க்கிறோம். ஏன் இந்த நிலை?

சிலர் பெரும் பணக்காரர்களாக இருந்தும் மனத்தளவில் பிச்சைக்காரர்களாக
இருப்பதையும், மேலும் சிலர் பிச்சையெடுத்து உண்ணும் நிலைமையிலும்,
பிறருக்கு ஈந்து மனதளவில் பணக்காரர்களாக திகழ்வதும் கண்கூடு. இதற்கு
காரணம் என்ன?

இதற்கெல்லாம் அறிவியல் ரீதியாக விளக்கம் காண முடியாது. ஆன்ம வழியில்
இதற்கு விளக்கம் தேடமுடியும். அப்படி விளக்கம் காண தேடியதின் விளைவாக
எழுந்ததுதான், சமயங்களின் பரிணமிப்புகளும், பலதரப்பட்ட சமயக் கோட்பாடுகளும்.

இதெற்கெல்லாம், கடவுள் காரணம் என்று சுலபமாக சொல்ல முடியாது.
இதேல்லாம், கடவுளின் செயல் என்று சமணமும் ஒப்புக் கொள்வதில்லை.
கடவுளின் செயல் என்றால் அதற்கு முழுச் சமாதானம் கூற முடியாது. இது நிற்க!

மேலே கூறியவற்றிக்கு சமாதானம் கூறும் பொருட்டு சமணம் ஊழ்வினை வாதத்தை முன் நிறுத்தியது. ஒருவன் ஒரு பிறவியில் செய்த பாவ, புண்ணியப் பயன்களை வரும் பிறவிகளில் அவன் அனுபவித்தே ஆகவேண்டும். பணக்காரரின் மகனாக பிறப்பவன், தந்தையின் மறைவிற்குப் பிறகு நொடிந்து, வறுமைப் பற்ற பிச்சைக்காரன் ஆகிறான். மற்றொருவனோ, ஏழ்மையில் பிறந்தாலும், பின் செல்வச் செழிப்பிலே திளைக்கிறான். இதற்கு காரணமாக அமைவது ஊழேயாம்.

இவற்றை வெகு அழகாக விளக்குகிறார் திருத்தக்க தேவர் பெருமான்.

பெரிய இன்பத்து இந்திரனும்
பெட்ட செய்கைச் சிறுகுரங்கும்
உரிய செய்கை வினைப்பயத்தை
உண்ணும் எனவே உணர்ந்து அவனை

........”
- சீவக சிந்தாமணி (2815)

என் உரை:

தேவருலகின் தலைவனான இந்திரன், சுகபோகங்களில் திளைப்பதும், சிறுமைச்
செயல்கள் செய்து திரியும் சிறிய குரங்கு அனுபவிப்பதும் தத்தம் நல்வினை,
தீவினைப் பயன்களாலேயாம்.

அவர் மேலும் அப்பாட்டை இவ்வாறு முடிக்கிறார்.

அரியர் என்ன மகிழாது
எளியர் என்ன இகழாது
இருசார் வினையுந் தெளிந்தாரே
இறைவன் நூலும் தெளிந்தாரே


அதனால், ஆகா இவர் பெரியவர் என்று மகிழாமல், அய்ய.. இவர் சிறியவர்
என்று இகழாமல், அவர்களின் நிலைமைக்கு அவர்கள் வினைப்பயன்களே
என்று தெளிந்து, நல்வினை/தீவினை அகற்றி இறைவன் நிலையடையுங்கள்
என்று நமக்கு அறிவுறுத்துகிறார்.

இதேக் கருத்தை கணியன் பூங்குன்றனார் இவ்வாறு பாடுவதைப் பாருங்கள்.

“..திறவோர் காட்சியிற் தெளிந்தனம் ஆகலின்
மாட்சியிற் பெரியோரை வியத்தகும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
....”



இரா.பானுகுமார்